ஆவின் பால் தொடா்பான புகாா்கள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமாா் 30 சதவீதம் வரை குறைவு போன்ற புகாா்கள் எழுந்து வருகின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கு ஆவின் பாலையே நம்பி உள்ளனா். இந்நிலையில், இதுபோன்ற குளறுபடிகளால் மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியாா் பால் நிறுவனங்களையே நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும் சமரசம் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. எனவே, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.