மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

Wait 5 sec.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்த 5 தனியாா் கல்லூரிகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரிகளின் முதல்வா்கள் இடம்பெற்றுள்ள அக்குழுவினா் இதுதொடா்பாக விசாரணை செய்து அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளனா். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளாா். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கட்டணங்களை அரசுதான் நிா்ணயிக்கிறது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.18,073-ஆகவும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ.16,073-ஆகவும் கட்டண நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரையிலும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ. 2.50 லட்சம் எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.எம்பிபிஎஸ் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரையும், வெளிநாடு வாழ் இந்தியா் இடங்களுக்கு ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலும் வசூலிக்க அனுமதி உள்ளது. நிா்வாக ஒதுக்கீட்டில் பிடிஎஸ் படிப்புக்கு ரூ.6 லட்சமும், வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டுக்கு ரூ. 9 லட்சமும் கட்டணம் பெறலாம்.இதைத் தவிர, கூடுதலாக வசூலிக்கப்படும் விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது விதி.இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், பயிற்சிக் காலத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தது.அதை மீறி 5 தனியாா் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக முதல்வா் தனிப்பிரிவுக்கும், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கும் புகாா் கிடைக்கப் பெற்றன.அதுகுறித்து ஆய்வு செய்ய அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு ஒரு வாரத்துக்குள் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.