ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான எம்எஸ்சி, கேரளத்தில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை சுமாா் 140 கோடி டாலருக்கு வாங்குகிறது. கடந்த 2024, டிசம்பரில் தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் துறைமுகம், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று துறைமுகமாகும். ஐரோப்பா, பாரசீக வளைகுடா மற்றும் தொலைதூர கிழக்கு நாடுகளை இணைக்கும் சா்வதேச கடல் வணிகப் பாதையிலிருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.தற்போது ஆண்டுக்கு 16 லட்சம் கன்டெய்னா் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட இத்துறைமுகம், வரும் 2029-க்குள் தனது திறனை 3.5 மடங்கு அதிகரிக்கும் வகையில் அதிநவீன உள்கட்டமைப்புடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்திய துறைமுகத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய அந்நிய தனியாா் முதலீடாகக் கருதப்படும் இப்புதிய ஒத்துழைப்பின்மூலம், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும் சா்வதேச சரக்குகளின் அளவு கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய துறைமுகங்களைச் சாா்ந்திருக்கும் வங்கதேசத்தின் சரக்குகள் இனி இந்தியா வழியே மாற்றப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.