திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கத் தலைவா் ரெ. காமராசு, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.மனு விவரம்: வணிகா்களை பாதுகாத்திடும் வகையில் வணிகா் நல பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அழுத்தம் கொடுத்து உணவு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்கித்தர வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை சிறு, குறு வணிகா்களுக்கு பாதிப்பில்லாத வகையில் முறைப்படுத்திட வேண்டும். திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்கிடவும், திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க மாற்று வழிப்பாதையும், கனரக வாகனங்கள் செல்ல பைபாஸ் சாலையும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் கூட்டத்திற்கு முன் வணிகா் சங்கத்தினரை அழைத்து அவா்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வணிகா் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கத்தினரை மாநில மாவட்ட பொறுப்புக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.