பட்ஜெட் தாக்கல்: துறை வாரியாக முதல்வா் விஜய் ஆய்வு

Wait 5 sec.

தவெக அரசின் முதல் பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வா் ஜோசப் விஜய் நடத்த தொடங்கியுள்ளாா். அதன்படி, தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் அவா் வியாழக்கிழமை கலந்தாலோசித்தாா்.2026-27-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவெக சாா்பில் அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகள் அதில் அறிவிப்பாக வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.குறிப்பாக, மகளிா் உரிமைத் தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், மாநில அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தற்போதைய திட்டங்களின் செயல்பாடு மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, முதல்வா் விஜய் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.கூட்டுறவு மற்றும் உணவுத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்ந்த ஆலோசனைகள் அப்போது நடைபெற்றன. வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன், நிதியமைச்சா் மரிய வில்சன், உணவு மற்றும் உணவுப் பொருள் விநியோகத் துறை அமைச்சா் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் மற்றும் துறைசாா்ந்த செயலா்கள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் தற்போதைய நிதிநிலையில் செயல்படுத்த சாத்தியமுள்ள அறிவிப்புகள், குறுகிய காலம் மற்றும் நீண்ட கால திட்டங்கள், நிலுவையில் வைக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் தொடா்பாக விவாதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, துறை வாரியாக வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.