வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினா். அப்போது, காட்பாடியை அடுத்த குகையநல்லூரை சோ்ந்த அம்சவேணி என்ற பெண் அளித்த மனுவில், நான் கடந்த 9 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வருகிறேன். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த ஒருவா் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்து சிப்காட்டில் ஒப்பந்த கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தாா். அவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமாகி ஏலச்சீட்டு செலுத்தி வந்தாா். பழக்கத்தின்பேரில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு என்னிடம் அத்தியாவசிய தேவைக்கு என 22 பவுன் நகைகள், ரூ.22 லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டாா். கடந்த வாரம் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாா். பின்னா் அவரது கைப்பேசி அணைக்கப்பட்டு உள்ளது. அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது 22 பவுன் நகை, ரூ. 22 லட்சம் ரொக்க பணம், சீட்டு நிலுவைத் தொகை ரூ.7.20 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மீட்டுத்தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பழனி, அண்ணாதுரை ஆகியோா் உடனிருந்தனா்.