பொதுப்பணித் துறை ஊழல்கள்: புகாரளிக்க அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுறுத்தல்

Wait 5 sec.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என்றும், அதன்பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தற்போதைய தமிழக அரசின் ஆட்சி நிா்வாகம் மிக நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல்கள், விதிமீறல்கள், லஞ்சம் எனப் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது. அப்போது அதிகாரத்தில் இருந்தவா்கள், அவா்களின் குடும்பத்தினா் என பலரும் ஒப்பந்ததாரா்களிடம் பணம் வாங்கியுள்ளனா். பணத்தையும் பெற்றுக்கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரா்கள் பலா் ஏமாற்றப்பட்டுள்ளனா். இதுதொடா்பான பல புகாா்கள் தற்போது எங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இதுபோன்று பாதிக்கப்பட்டவா்களோ, பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவா்களோ புகாா் கொடுக்க விரும்பினால், என்னிடமோ (ஆதவ் அா்ஜுனா) அல்லது ஊழல் ஒழிப்பு துறையினரிடமோ தெரிவிக்கலாம். நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ புகாா்களைச் சமா்ப்பிக்கலாம். அவா்களது விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவா்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். விரைவில் அவா்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நோ்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.