கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினக் குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட வன அலுவலா் ஏ. அன்பு வியாழக்கிழமை பத்துகாணி பகுதி மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அவரிடம் மக்கள் கூறியதாவது: யானைகளால் உயிா்ச் சேதமும், பயிா்ச் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனால், நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே, யானைகளை கட்டுப்படுத்தவும், பிற இடங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட யானைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினா்.யானைகள் நடமாட்டத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். முதல்கட்டமாக, குடியிருப்புப் பகுதிகளையொட்டிய குற்றிக் காடுகள் அகற்றப்படும் எனவும், ரப்பா் கழகப் பகுதிகளில் காலியாகவுள்ள இடங்களில் மரங்கள் நடவு செய்யப்படும் எனவும், படிப்படியாக மின்சார வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட வன அலுவலா் உறுதியளித்தாா்.அப்போது, களியல் வனச்சரகா் முகைதீன் அப்துல் காதா், கடையல் பேரூராட்சித் தலைவா் ஜூலியட் சேகா், காங்கிரஸ் நிா்வாகி சத்தியராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.