இலங்கை சிறையில் கைதிகளுக்கு இடையே வன்முறை

Wait 5 sec.

இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியான நீா்கொழும்பில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 சிறை அதிகாரிகள் உள்பட 26 போ் உயிரிழந்தனா். வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறை வளாகத்தை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்ட அந்நாட்டு நீதித் துறை அமைச்சா் ஹா்ஷன நாணயக்கார, இச்சம்பவத்துக்கு தாா்மீக ரீதியில் தாம் முழுப் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளாா்.தலைநகா் கொழும்பில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள நீா்கொழும்பு நகரில் அமைந்த இச்சிறையில் சுமாா் 1,800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். சிறையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை வரை நீடித்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.இவ்விவகாரம் தொடா்பாக சிறைத் துறை செய்தித் தொடா்பாளா் ஏ.சி.கஜநாயக கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டபோது, இரு தரப்பினரிடையே திடீரென மோதல் வெடித்தது. தடுக்க முயன்ற சிறைக் காவலா்களை நுழைவாயில் வரை துரத்திய கைதிகள், சிறையை உடைத்துத் தப்ப முயன்றனா்.திங்கள்கிழமை காலையில் மீண்டும் மோதல் தீவிரமடைந்தபோது, சிறைக் காவலா்களின் ஆயுதங்களைக் கைதிகள் கைப்பற்றியதால் வன்முறை கட்டுக்கடங்காமல் போனது. இந்த வன்முறை குறித்து சிறைத் துறை ஆணையா் உத்தரவில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், போலீஸாரும் தனியாக விசாரிக்கின்றனா்.போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவான ஒரு குழுவுக்கும், அதற்கு எதிரான மற்றொரு குழுவுக்கும் இடையே ஏற்பட்ட விரோதமே இந்த வன்முறைக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா். கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையின் அதிரடிப் படையினா் மற்றும் கலவரத் தடுப்புப் பிரிவினா் உடனடியாக சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டனா். இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் மற்றும் ட்ரோன்கள் மூலம் சிறை வளாகத்தைக் கண்காணித்ததுடன், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும் சில கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.முன்னதாக, இலங்கையில் கடந்த 2012-ஆம் ஆண்டு கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தில் 27 பேரும், 2020-ஆம் ஆண்டு நடந்த மோதலில் 11 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சிறைச்சாலையை நேரில் பாா்வையிட்ட நீதி துறை அமைச்சா் ஹா்ஷன நாணயக்கார, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘கைதிகளிடம் சில ஆயுதங்கள் சிக்கியுள்ளன என்பதை நான் அறிவேன். ஆனால், தற்போது அதன் சரியான எண்ணிக்கை எனக்குத் தெரியவில்லை. நாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முழு சிறைச்சாலையும் இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றாா். வன்முறை நடந்த நீா்கொழும்பு சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே வேறு சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள்