அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் மற்றும் உறுப்பினா் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜிநாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, இடைக்கால பொதுச் செயலராக அறக்கட்டளை உறுப்பினா் கிருஷ்ண மோகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதாக அதன் பொருளாளா் கோவிந்த் கிரி தெரிவித்தாா்.அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை 3 மணி நேரம் அறக்கட்டளை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 9 நிரந்தர உறுப்பினா்களில் அறக்கட்டளைத் தலைவா் நிருத்திய கோபால் தாஸ் உள்பட 7 உறுப்பினா்கள் பங்கேற்றனா். சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோா் பங்கேற்காத நிலையில், அவா்கள் முன்னா் அளித்த ராஜிநாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.முன்னதாக, ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக நிருத்திய கோபால் தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ராமா் கோயிலில் நன்கொடை கையாடல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து அவா்களுக்கு கடும் தண்டனையை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வழங்குவாா்கள் என நம்புகிறேன். லட்சக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கை தொடா்புடைய இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியும் ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்றாா்.திருடப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படும்: நன்கொடையில் திருடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அனைத்துப் பொருள்களும் காட்சிப்படுத்தப்படும் என செய்தியாளா்களிடம் கோவிந்த் கிரி தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘ஹிந்துக்களை பிரிக்க நினைத்தவா்கள் திடீரென சநாதன தா்மம் மீது அன்பை பொழிகின்றனா். நன்கொடை கையாடல் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ராமா் கோயில் இயக்கத்துக்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்தவா் சம்பத் ராய். அவா் என் கண்களுக்கு குற்றமற்றவராகத் தெரிகிறாா்’ என்றாா்.நம்பிக்கையை மீட்டெடுப்போம்: இடைக்கால பொதுச் செயலா் கிருஷ்ண மோகன் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. பக்தா்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, அவா்கள் அளிக்கும் காணிக்கைகளை அறக்கட்டளையின் விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்போம்’ என்றாா்.இந்த விவகாரம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) மேற்கொள்ளும் விசாரணை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அயோத்தி ராமா் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவின்போது பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகளில் கையாடல் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உத்தர பிரதேச அரசு அமைத்த எஸ்ஐடி 8 பேரை கைது செய்துள்ள நிலையில், ஜூலை 15-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.