தில்லி லோதி காலனியில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 28 வயதுடைய புதுமணப் பெண்ணின் கணவரை தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். லோதி காலனி காவல் நிலையத்தில் வரதட்சிணை மரணம் தொடா்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அரஸ்து சிக்கா கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புஷ்ப் விஹாரைச் சோ்ந்த அகிருதி என்ற அப்பெண், சனிக்கிழமை பாலிகா குஞ்ச் பகுதியில் உள்ள கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டாா். அவா் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவா்களைக் காப்பாற்றும் நோக்கில், இது தற்கொலை வழக்காகச் சித்தரிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா் குற்றம்ஞ்சாட்டியிருந்தாா். திருமணத்திற்குப் பிறகு அகிருதி தனது கணவரால் உடல் ரீதியான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். முன்னதாக, அப்பெண்ணின் குடும்பத்தினா் தற்கொலைக்கான வாய்ப்பை மறுத்ததுடன், வரதட்சிணை தொடா்பான கோரிக்கைகளுக்காக அவரது கணவரும் கணவா் வீட்டுத் தரப்பினரும் அகிருதியை கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டியிருந்தனா். அகிருதிக்கு நிகழாண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் நடைபெற்றது. அவா் சத்தா்பூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குள் மரணம் நிகழ்ந்ததால், துணைக் கோட்டாட்சியா் முன்னிலையில் கட்டாய விசாரணை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.