மேக்கேதாட்டு எனும் மாயவலை!

Wait 5 sec.

மேக்கேதாட்டு அணை சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான தேவையையே தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து இரு மாநிலங்களுக்கு இடையில் சமரசம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.மேக்கேதாட்டு உள்ளிட்ட வேறு எந்தவிதமான புதிய அணைகளையும் தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், நடுவர் மன்றமும் தெளிவாக தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், தேவையில்லாமல் இந்த விவகாரத்தை நடுவர் மன்றத்துக்கு ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் சரி செய்ய முடியாத ஒரு புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.இது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, நீர்வளத் துறை அமைச்சரும், பொதுப் பணித் துறை அமைச்சரும் தெரிவித்த கருத்துகள் குறிப்பிடத்தக்கவை. புதிய நடுவர் மன்றம் என்பது மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பானது மட்டும்தான். இதனால், ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்தார்.பொதுப் பணித் துறை அமைச்சர் விளக்கம் அளிக்கும்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழ்நாட்டுக்கு நம்பிக்கை இல்லை என்பதால்தான் புதிய நடுவர் மன்றம் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைத்திருக்கிறது என்று தெரிவித்தார். இருவரின் நிலைப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுந்திருக்கிறது. புதிய நடுவர் மன்றம் அமைத்தாலும் தமிழ்நாட்டுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 177.25 டிஎம்சி என்ற நீரின் அளவு குறையாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.மாறாக, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மேக்கேதாட்டு அணை சிக்கல் குறித்து விசாரிக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு போராடி பெற்ற உரிமைகளை தாரை வார்ப்பதுபோல் அமைந்து விடாதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.நடுவர் மன்றம் என்பது இருதரப்பும் ஏற்றுக் கொண்ட ஒரு விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அமைப்பாகும். ஆனால், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான தேவையையே தமிழகம் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இது குறித்து நடுவர் மன்றம் அமைத்து இரு மாநிலங்களுக்கும் இடையில் சமரசம் செய்ய வேண்டும் என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?ஒருவேளை புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இருதரப்பு கருத்துகளைக் கேட்ட பின்னர் மேக்கேதாட்டு அணையை கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம். ஆனால், கொள்ளளவை 70 டிஎம்சி என்பதற்குப் பதிலாக 65 டிஎம்சி குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தால் தமிழக அரசு எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அது காவிரி பாசன விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகமாகி விடும். உண்மையில், மேக்கேதாட்டு அணை சிக்கலுக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது கர்நாடக அரசு வைக்க வேண்டிய கோரிக்கையே தவிர, தமிழக அரசு அல்ல என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.மேக்கேதாட்டு அணை சிக்கலைத் தீர்க்க ஆக்கபூர்வமான யோசனையை அணுக வேண்டும் என்கிற அடிப்படையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னவற்றை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், மேக்கேதாட்டு, அணை விஷயத்தில் மேலும் ஒரு புதிய முடிச்சு விழுந்து, அது அவிழ்க்க முடியாத சிக்கலாக மாறி விடும். காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி அளித்த தீர்ப்பின் 4- ஆம் தொகுதியில் 173, 174, 175 ஆகிய பக்கங்களில் கர்நாடக அரசின் பாசனப் பரப்பு தொடர்பான கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர், சுவர்ணவதி, அக்ராவதி உள்ளிட்ட அணைகளின் நீரைக் கொண்டு செயல்படுத்தப்படும் 28 திட்டங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல், அந்தத் தீர்ப்பின் 3-ஆம் தொகுதியில் 98, 99, 100 ஆகிய பக்கங்களில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 1972-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு டிஎம்சிக்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்கள் 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட ஒரு டிஎம்சிக்கும் அதிக கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்கள் எதிர்காலத்தில் கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் என முறையே 13, 13, 8 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எதிலுமே மேக்கேதாட்டு அணை குறிப்பிடப்படவில்லை.குறிப்பாக, புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 8 திட்டங்களும் கேரளத்தின் கபினி நீர்ப்பிடிப்புப் பகுதியில்தான் உள்ளனவே தவிர, கர்நாடகத்தில் எந்தத் திட்டமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது புதிதாக எந்தப் பாசன திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது என்ற தீர்ப்பின் அடிப்படையில், மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் கர்நாடக அரசால் செயல்படுத்த முடியாது. மேலும், மேல்மடை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் எந்தக் கட்டுமானங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி அவசியம் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது, மேக்கேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோருவது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும்.காவிரி நீரை தமிழ்நாடு பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முழுமையாக அனுமதி அளித்துள்ள நிலையில், காவிரியில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி வருவது சர்வாதிகாரப் போக்கு இல்லையா? இதன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறுகிறது கர்நாடக அரசு. மேக்கேதாட்டுவில் அணை கட்டி தமிழகத்துக்கு காவிரி நீர் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் கர்நாடகத்துக்கு இருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சி செய்று வருகிறது. 1980-ஆம் ஆண்டில் கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சோந்த குண்டுராவ் இருந்தார். அப்போதுதான், மேக்கேதாட்டுவில் அணைகட்டும் திட்டத்துக்கு அடித்தளம் போடப்பட்டது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.மீண்டும் 2012-இல் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, "கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது. மீறி கட்டினால் சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவுக்குப் பதில் அளித்த கர்நாடக அரசு, "மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டாலும், தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீரின் அளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' என்று கூறியது. கர்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வெளியேறும் நீர் கபினி அணைக்குச் சென்று அங்கிருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு என்ற இடத்துக்கு வருகிறது. பிலிகுண்டுலுவில்தான் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அளவிடப்படுகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைபடாதா?காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு எப்போதுமே திறந்து விட்டதில்லை. கர்நாடகத்தில் அதிக அளவு மழை பொழிந்து அணை நிரம்பி வழிந்தால் மட்டுமே, வேறு வழியின்றி உபரிநீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி சென்னை உள்பட 11 மாவட்டங்கள் குடிநீருக்கும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் காவிரி நீரையே நம்பியிருக்கின்றன.தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்குமான காவிரி நீர் பிரச்னை அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்துக்கும் உரிமை உண்டு என்று ஒப்பந்தம் இருந்தாலும், கர்நாடக அரசு அதை ஏற்காமல் எங்களுக்கு வேண்டிய தண்ணீரே கிடைக்கவில்லை. பின்பு நாங்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும்? தமிழகத்துக்கு உரிமை உண்டு என்ற ஒப்பந்தம் எல்லாம் முடிந்து விட்டது என்று சொல்கிறது; இது எந்த வகையில் நியாயம்?காவிரிப் பிரச்னையைப் பொருத்தவரை கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சித்தராமையா, தற்போதைய முதல்வர் டி.கே. சிவக்குமார் வரை அனைவரும் ஒரே அணியில் நிற்கிறார்கள். தமிழகத்துக்கான தண்ணீரைத் தந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக அரசு பின்னும் ஒரு மாயவலைதான் மேக்கேதாட்டு அணைப் பிரச்னை.