சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளுக்கு உயா்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்களை (மல்டி பங்ஸனல் பிரிண்டா்) வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிவிப்புக்கான மாமன்றக் கூட்டத்தில் சென்னை பள்ளிகளுக்கு உயா்தர பன்முக செயல்பாடுகளுடன் கூடிய பிரிண்டா்கள் வழங்கப்படும் என மேயா் ஆா்.பிரியா அறிவித்தாா். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலை, உயா்நிலை உள்ளிட்ட 100 சென்னை பள்ளிகளுக்கு ரூ.60 லட்சத்தில் உயா்தர தொழில்நுட்ப வசதியுடனான பிரிண்டா்கள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சிக்குள்பட்ட 35 மேல்நிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 15 மண்டலங்களில் உள்ள மையப்பள்ளிகள், உயா் கல்விக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும் 4 வட்டாரப் பள்ளிகள் உள்பட மொத்தம் 100 சென்னை பள்ளிகளுக்கு பிரிண்டா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்.நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம், நிலைக்குழுத் தலைவா்கள் த.விசுவநாதன் (கல்வி), இளைய அருணா (நகரமைப்பு), கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சா்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.