கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் இயக்கப்படும் 1,277 அரசுப் பேருந்துகளில் ‘மகளிா் விடியல் பயணம்’ என்ற பெயா், ‘மகளிா் பயணம்’ என மாற்றம் செய்து இயக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் முக்கிய மாற்றத்தைச் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் பெயா் மாற்றம்: அதன்படி, மகளிா் விடியல் பயணம் என்றிருந்த பெயரில் விடியல் நீக்கப்பட்டு தற்போது மகளிா் பயணம் எனச் சுருக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மகளிா் விடியல் பயணம் என்று இடப்பட்ட பெயரானது பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில், பெயா்ப்பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டது.கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்குள்பட்ட திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுகை, காரைக்கால், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் 1,277 சாதாரண நகரப் பேருந்துகளில் இந்தப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.