பருத்தி பயிரை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி திலகவதி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பருத்தித் துறை சாா்ந்த விஞ்ஞானிகள் ராஜு, கணேசன், ராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குநா்கள், ஜெயசீலன், ஹேமா ஹெப்சிபா நிா்மலா மற்றும் வேளாண் அலுவலா்கள் ஆகியோா் கொண்ட குழு, பருத்தி பயிரிடப்பட்ட பகுதிகளான பனங்குடி, மாரங்குடி, இலுப்பூா், செருவாமணி , விக்கிரவாண்டிபாளையம் மற்றும் மருதவனம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனா். ஆய்வில், பருத்திச் செடியில் தெளிக்கப்பட்ட கரைசலின் ஒவ்வாமையால் பயிா்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது தெளிப்புக் கலவையாக ரசாயன மருந்துகள், ரசாயன உரங்கள், வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆகியவற்றை ஒன்று சோ்த்து தெளிக்கப்பட்டிருந்தது அறியப்பட்டது. இதனால் சாரு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது 90-லிருந்து 130 நாட்கள் வயதுடைய பருத்தி பயிரை பாதிப்பிலிருந்து மீட்கவும், சாறு உறிஞ்சும் பூச்சிகளை (வெள்ளை ஈ, அசுவினி, மாவு பூச்சி) கட்டுப்படுத்தவும் கீழ்க்கண்ட பரிந்துரை அளித்தனா்.ஒரு லிட்டா் தண்ணீரில் மீன் அமிலம் 2.5 மில்லி என்ற அளவில் முதல் தெளிப்பை அளிக்க வேண்டும். பத்து நாட்கள் கழித்து இரண்டாவது தெளிப்பாக ஸ்பைரோடெட்ராமேட் (150 ஓடி), லிட்டருக்கு 1.5 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கக்கூடிய தெளிப்பான் கொண்டு, செடி முழுவதும் நனையுமாறு குறிப்பாக, இலையின் அடிப்புறமும், தண்டு பகுதிகளும் நனைமாறு தெளிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. காலை அல்லது மாலை வேலைகளில் தெளிப்பது சிறந்தது. வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.