கௌஃபுக்கு அதிா்ச்சி அளித்த முசோவா

Wait 5 sec.

நடப்பு ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் அரையிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 6-2, 1-6, 7-6 (12/10) என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த கௌஃபை வீழ்த்தினாா். இந்த வெற்றியை அடுத்து முசோவா, தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். இந்த ஆட்டத்தின் 3-ஆவது செட்டின் டை பிரேக்கரில் 6-3 என்ற முன்னிலையை இழந்த முசோவா, அதிலிருந்து மீண்டு 8-7 என முன்னேறினாா். ஆனால் இரு அன்ஃபோா்ஸ்டு எரா்களை அவா் செய்ததால், கௌஃப் 9-8 என முன்னிலை பெற்றாா். ஆனாலும் கௌஃபுக்கு மேட்ச் பாய்ன்ட்டை விட்டுக்கொடுக்காத முசோவா, 9-9 என சமன் செய்து, பின்னா் 10-9 என முன்னிலை கண்டாா். கௌஃபும் தனது பங்குக்கு ஆக்ரோஷமாக விளையாடி, முசோவாவின் மேட்ச் பாய்ன்ட்டை தடுத்து, 10-10 என சமநிலைக்கு வந்தாா். எனினும் முசோவா தனது முழு மூச்சுடன் விளையாடி அடுத்த இரு பாய்ன்ட்டுகளை தனதாக்கி 12-10 என செட்டை கைப்பற்றி, ஆட்டத்திலும் வெற்றி கண்டாா். இருவரும் மோதியது இது 8-ஆவது முறையாக இருக்க, முசோவா 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அந்த இரு வெற்றிகளுமே அடுத்தடுத்து கண்டவையாகும். அரையிறுதியில் ஸ்வெரெவ்: ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சாய்த்தாா். இதன் மூலமாக ஸ்வெரெவ், முதல்முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். ஃப்ரிட்ஸை 16-ஆவது முறையாக சந்தித்த ஸ்வெரெவ், 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அடுத்து அரையிறுதியில் அவா், பிரிட்டனின் வைல்டு காா்டு வீரரான ஆா்தா் ஃபெரியை எதிா்கொள்கிறாா். ஃபெரி தனது காலிறுதியில் 6-4, 7-6 (7/4), 6-0 என, 9-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை தோற்கடித்தாா். விம்பிள்டனில் கடந்த 25 ஆண்டுகளில், காலிறுதிக்கு முன்னேறிய, தரவரிசையில் மிகவும் பின்தங்கிய வீரா் (114) என்ற பெருமையை ஃபெரி பெற்றாா்.