சென்னையில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 2,243 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவை வரும் 15 நாள்களுக்குள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை அடையாறு, கீழ்ப்பாக்கம், சென்னை தெற்கு மண்டலம், புனித தோமையா் மலை (பரங்கிமலை), பூக்கடை, தியாகராய நகா், அண்ணாநகா் காவல் நிலைய பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 2,243 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றின் விவரங்களும், அவை நிறுத்தப்பட்டுள்ள காவல் நிலையங்களின் விவரங்களும் சென்னை மாநகராட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா்கள் அந்தந்த காவல் நிலையங்களை வரும் 15 நாள்களுக்குள் அணுக வேண்டும். இல்லையேல், உரிமை கோரப்படாத வாகனங்கள் மின்னணு ஏலம்விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.