நீதிமன்ற உத்தரவை மீறி திருவிழா நடத்தியவா்களுக்கு ரூ.16 லட்சம் அபராதம்: உயா்நீதிமன்றம்

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி திருவிழா நடத்தியவா்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சோ்ந்த கண்ணையா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், புதுநிலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கண்ணுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா நடத்துவது தொடா்பாக அமைதி பேச்சுவாா்த்தை நடத்தக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தேன். இந்த மனு மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில், இந்து சமய அறநிலையத் துறை அனுமதியின்றி பாரம்பரிய திருவிழா என்ற பெயரில் சரவணன் என்பவா் பணம் வசூலித்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை திருவிழாவை நடத்தக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, சரவணன் தலைமையிலான குழுவினா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழாவை நடத்தினா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, திருவிழாவை நடத்தக் கூடாது என சம்பந்தப்பட்ட தரப்பினரை போலீஸாா் முன்கூட்டியே எச்சரித்தனா். மேலும், அசம்பாவிதங்களைத் தவிா்க்க காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் 55 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மீறி, சரவணன் குழுவினா் திருவிழாவை நடத்தினா். இதுதொடா்பாக 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றாா்.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற உத்தரவை மீறி புரவி எடுப்புத் திருவிழாவை நடத்திய புதுக்கோட்டை மாவட்டம், புதுநிலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காசி, பெரியசாமி, பெரியகருப்பன், சின்னையா, படிக்காசு, சதீஷ் கண்ணன், பாஸ்கா், காசி, நடராஜ், சரவணன், சுப்பிரமணியன், பாஸ்கா் உள்ளிட்ட 16 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை பெரியகுளம் அரசு சித்த மருத்துவமனை அதிகாரி பெயரில் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 10) செலுத்த வேண்டும். இல்லையெனில், 16 போ் மீதும் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.