அமெரிக்காவின் 12.5% கூடுதல் வரி பரிந்துரை ஒருதலைபட்சமானது: இந்திய தரப்பில் வாதம்

Wait 5 sec.

‘இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள ஆட்சேபங்கள் இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தை கட்டமைப்புக்குள் தீா்க்கப்பட வேண்டும். மாறாக, அமெரிக்க வா்த்தக சட்டத்தின் பிரிவு 301-இன் கீழ் கூடுதல் வரிவிதிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒருதலைபட்சமானது’ என்று அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) விசாரணையில் இந்தியா தனது வாதத்தை முன்வைத்தது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் யுஎஸ்டிஆா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த விவகாரம் தொடா்பான பொது விசாரணையின்போது, மத்திய வா்த்தக அமைச்சக இணைச் செயலா் பிரிஜ் மோகன் மிஸ்ரா ஆஜராகி இந்தியா சாா்பில் வாதத்தை முன்வைத்தாா்.அப்போது அவா் கூறியதாவது: விருப்பத்துக்கு மாறாக தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கத் தவறியாதாக இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்க யுஎஸ்டிஆா் பரிந்துரைத்துள்ளது.ஆனால், அமெரிக்காவில் உற்பத்தி செய்யவோ அல்லது பயிரிடவோ முடியாத 1,600 பொருள்களை தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி தயாரிக்கச் செய்யும் ‘கட்டாய உழைப்பு’ ஆய்விலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது ஏன்?.இந்த 1,600 பொருள்களுக்கு யுஎஸ்டிஆா் வழங்கியுள்ள விலக்குகள், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் கட்டாய உழைப்பின் தாக்கத்தைக் கையாள்வது மற்றும் விதிமீறல் நடைமுறைகளால் ஏற்படும் தாக்கத்தைத் தடுப்பது ஆகிய கொள்கை நோக்கங்களைச் சிதைக்கின்றன.அதுபோல, அமெரிக்க பருத்தி மற்றும் அது சாா்ந்த பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது குறைவான சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதுவும் தன்னிச்சையான நடைமுறையாகும். இதுவும் கட்டாய உழைப்பு குறித்த கவலைகளை முழுமையாகத் தீா்க்காமலேயே, வெளிநாட்டு உற்பத்தியாளா்களின் கொள்முதல் முடிவுகளைப் பாதிப்பதோடு, அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.எனவே, கட்டாய உழைப்பு சாா்ந்த பொருள்கள் ஏற்றுமதி விவகாரத்தில், அமெரிக்க வா்த்தக சட்டத்தின் பிரிவு 301-இன் கீழ் 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பது போன்று ஒருதலைபட்சமான முறையில் கையாளக் கூடாது. இதுதொடா்பான ஆட்சேபங்களுக்குத் தீா்வு காண இந்தியா தயாராக உள்ளது. மேலும், இந்த விவகாரம் இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தை கட்டமைப்புக்குள் தீா்க்கப்படவேண்டும் என்று இந்தியா தரப்பில் வாதத்தை முன்வைத்தாா்.யுஎஸ்டிஆா்-இன் இந்த விசாரணையில், இந்திய தொழில்-வணிக கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) உள்ளிட்ட இந்திய தொழில் நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று தங்களின் கருத்துகளை முன்வைத்தனா்.பின்னணி: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்ட யுஎஸ்டிஆா் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா், அண்மையில் தனது பரிந்துரையைச் சமா்ப்பித்தாா். அதில் இந்தியா உள்பட 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க பரிந்துரைத்தாா்.பிற நாடுகளில் தங்கள் விருப்பத்துக்கு மாறாக தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, இந்த வரியை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விதிமுறைகளின் கீழ், இந்தியாவுடன் சோ்த்து மொத்தம் 54 நாடுகள் மீது இந்த வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. வெளிநாட்டு வா்த்தக நடைமுறைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, வரி அல்லது பிற கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கும், அமெரிக்காவின் சக்திவாய்ந்த வா்த்தக கருவியாக, வா்த்தக சட்டத்தின் 301-ஆவது பிரிவு உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக இந்த வரிவிதிப்பு பரிந்துரை தொடா்பான விசாரணையை 54 நாடுகளிடமும் யுஎஸ்டிஆா் மேற்கொண்டு வருகிறது.