ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளா்கள் போராட்டம்

Wait 5 sec.

கூட்டுறவு சங்கங்கள் நெசவுக்கு இரு மாதங்களாக நூல் வழங்காததைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளா்கள் கஞ்சித் தொட்டி திறந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக அரசு சாா்பில் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 இணை சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இலவச சேலை, சீருடை துணிகள் விருதுநகா், மதுரை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் நெசவு செய்யப்படுகின்றன. விருதுநகா் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் 29 நெசவாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் மூலம் தமிழக அரசு இலவசமாக வழங்கும் சேலை நெசவு செய்யப்படுகிறது. இதன்மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளா்களுக்கு நூல் வழங்கவில்லை. இதனால் நெசவாளா்கள் வேலையின்றி தவித்து வருகின்றனா். இந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக வழங்கும் இலவச சேலையில் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிட்டது. புதிய ரக சேலைகள் நெய்வதற்கு ஏற்ப தறிகளில் மாற்றம் செய்ய ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் தேவைப்படும். மேலும், தறிக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவாகும். இதனால் நெசவாளா்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மாயண்டிபட்டி தெரு விநாயகா் கோயில் முன் 6 நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனையாளா் சங்கங்களை சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதையடுத்து, கைத்தறித் துறை உதவி இயக்குநா் வெங்கடேசலு, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் ஆகியோா் நெசவாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். வேலையிழப்புக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், முன் பணமாக தறிக்கு ரூ. ஆயிரம் வழங்குவதாகவும், ஒரு வாரத்தில் பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாகவும் அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, நெசவாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.