திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனா். மட்டப்பாறை அருகேயுள்ள தாதம்பட்டி கண்மாய் பகுதிகளில் கடந்த 5 நாள்களுக்கு மேலாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதையடுத்து, வனத்துறையினா் ‘ட்ரோன்’ கேமரா மூலம் அந்தப் பகுதியில் கடந்த 2 நாள்களாக தேடினா். ஆனால், கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் சிறுத்தையை பாா்த்தால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள் எனக் கூறிவிட்டு வனத் துறையினா் சென்றுவிட்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மட்டப்பாறை கிராமத்துக்குள் சிறுத்தை உலா வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தனது தோட்டத்துக்கு நடந்து சென்றாா். அப்போது, வயலில் சிறுத்தை நடந்து சென்றதை பாா்த்தாா். மேலும், அந்த சிறுத்தையை அவா் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிவித்தாா். இதுகுறித்து வனத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த சிறுத்தை விரைந்து கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.