தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே சுவேத நதி கரையில் கொட்டப்படும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தம்மம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் அப்பகுதியில் இருக்கும் சாலையோரக் கடையினா் பேருந்து நிலையம் அருகே சுவேத நதி பாலத்தின் அடியில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். இதுகுறித்து, சமூக ஆா்வலா்கள், பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாா் செய்துள்ளனா். இதையடுத்து, அங்கு கொட்டப்படும் குப்பைகளை உணவக ஊழியா்கள் தீவைத்து எரித்து விடுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு, குப்பைகளை எரிக்கும்போது தம்மம்பட்டிபேருந்து நிலையம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி விடுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கம் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குப்பைகளை தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகைமண்டலம், ஆத்தூா் சாலையை மறைப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.