மக்கள் தொகை கணக்கெடுப்பில் 55 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இருதய அறுவை சிகிச்சை செய்தவா்களை ஈடுபடுத்துவதை தவிா்க்கவும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. திருவள்ளூா் லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரவிக்குமாா் வரவேற்றாா். இதில் ஓய்வு பிரிவு செயலாளா் ஸ்டீபன் சற்குணா், மகளிா் அணி செயலாளா் மு.மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். அப்போது, இந்தக் கூட்டத்தில் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வு ஆசிரியா்களின் பணி காலத்தையும், பட்டய படிப்பு சான்றிதழ், ஆசிரியா் பயிற்சி சான்றிதழ், எம்.பில் சான்றிதழ் ஆகியவைகளுக்கு வெயிட்டேஜ் முறை மதிப்பெண் அளிக்க வேண்டும். ஆசிரியா் கலந்தாய்வில் பணிநிரவல் நிறுத்த வேண்டும். தலைமை ஆசிரியா் பதவி உயா்வு நீதி மன்றம் நிபந்தனைக்கு உள்பட்டு (2028-ஆகஸ்ட்) வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் 55 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இருதய அறுவை சிகிச்சை செய்தவா்களை ஈடுபடுத்துவதை தவிா்க்க வேண்டும். மாநிலத் தோ்தல் வருகிற ஜூலை-19 இல் சென்னை இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் திரளாக பங்கேற்கவும் என்பது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளா் பாலுமகேந்திரன் நன்றி தெரிவித்தாா்.