கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு, தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய், நேற்று பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.கரூர் கூட்ட நெரிசலில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பலியாகினர். இதில் பல்வேறு காரணங்களால் ஐந்து குடும்பங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. 31 குடும்பங்களைச் சேர்ந்த 17 பெண்கள், 14 ஆண்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பெரும்பாலும், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பணிகள் வழங்கப்பட்டிருந்தன. செல்வராணி என்ற பயனாளிக்கு வருவாய்த் துறையில் மசால்ஜி என்ற பணி வழங்கப்பட்டிருந்தது. இந்த பணி வாய்ப்பு குறித்து பலருக்கும் ஆச்சரியம். இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதி வருபவர்களுக்கும் இது பற்றி பெரிய அளவில் தெரிந்திருக்கவில்லை. இந்த நிலையில் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களிலும் இந்த பணியிடம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்கள். மசால்ஜி என்றால் எந்தவிதமான பணி, எங்கெல்லாம் இந்த பணி வாய்ப்பு இருக்கும், கல்வித் தகுதி என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.அது என்ன மசால்ஜி பணியிடம்?மஷ்அல் என்ற பாரசீக அல்லது உருதுமொழி சொல்லுக்கு விளக்கு, ஒளி, தீவட்டி, தீப்பந்தம் என்று பொருள். அரபு மொழியில் மிஷால் என்றால் இருளைப் போக்கும் என்பது அர்த்தமாகும்.மின்சாரம் வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், விடுதிகளில் எண்ணெய் விளக்குகளை சுத்தம் செய்து, மாலை நேரத்தில் விளக்குகளை ஏற்றி, பிறகு அணைத்து, விளக்குகளை பத்திரப்படுத்தும் பணிகளை செய்து வந்தவர்கள்தான் மசால்சிகள். இதனை தற்போது மசால்ஜி என்று பதிவு செய்திருக்கிறார்.இதுபோல, இந்திய ராணுவத்தில், சமையல் பணியில் உதவியாளர்களை மசால்ஜி என்றும் கூறுகிறார்கள். இந்த மசால்ஜி என்ற வார்த்தை, மத்திய, மாநில அரசுகளில் மாற்றம் செய்யப்பட்டு அலுவலக உதவியாளர் என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வருவாய்த் துறை, நீதித் துறையில் மட்டும் இந்த மசால்ஜி பயன்பாடு இன்னமும் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.எந்தவிதமான வேலைகளை செய்வர்?அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களில், தற்போது மசால்ஜி என்ற பணியில் நியமனம் செய்யப்படுவர்கள், விளக்குகளை ஏற்றுவது, உரிய நேரத்தில் அணைப்பது.சமையலறையில் பணியாளர்களுக்கு உதவி செய்தல்அலுவலகம், நீதிமன்றத்தை சுத்தமாக வைப்பதுகோப்புகளை அடுக்கி வைப்பதுஅஞ்சல்களை அந்தந்த மேஜைகளுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட அலுவலக உதவியாளரின் பணிகளை மேற்கொள்வார்.கல்வித் தகுதி - பொதுவாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது பொதுவானது. வயது வரம்பில் விலக்குகளும் உண்டு. தமிழக அரசின் விதிகள்படி, சம்பள விகிதம் ரூ.15,700 - ரூ.50,000 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.நேரடி நியமனம் - மசால்ஜி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வழக்கமாக மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலமாக வெளியிடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த் துறையில் காலியலாக உள்ள மசால்சி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. பொதுவாக, இந்த பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு இனச்சுழற்சி அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவுக்குள்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கென ஒதுக்கீடு செய்யப்படுகிறது. Job provided by CM Vijay in Karur! What is a Masalji