பாரம்பரியக் கலைகளுடன் மனித உணர்வுகள் கொப்புளிக்கும் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை!

Wait 5 sec.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில், சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் தாரை தப்பட்டை.இந்தத் திரைப்படம் நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான கரகாட்டம், தவுல், தாரை - தப்பட்டை வாசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையையும், அவர்கள் படும் வலியையும் மையப்படுத்தி, பாலா தன்னுடைய பாணியில் தாரை தப்பட்டையாக எடுத்திருந்தார். அவர்கள் தங்களின் கலைக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கப் போராடுவதையும் அதனால் ஏற்படும் வறுமையையும் யதார்த்தமாக இயக்கியிருப்பார்.தஞ்சாவூரை பின்புலமாகக் கொண்டு, சசிகுமார் (சன்னாசி) தாரை தப்பட்டை கரக்காட்டக் குழுவை நடத்தி வருகிறார். அந்தக் குழுவில் உள்ள நடனக் கலைஞர் நடிகை வரலட்சுமி (சூறாவளி). சசிகுமாரை அதிதீவிரமாக காதலிக்கிறார் வரலட்சுமி. ஆனால், தன்னுடைய காதலை, வெளிக்காட்டாமல் உள்ளே வைத்துக்கொண்டு மறைத்து வாழ்கிறார் சசிகுமார். இதனிடையே, வரலட்சுமிக்குத் திருமண வரன் அமைகிறது, தன்னுடைய காதலைத் தியாகம் செய்து, கடத்தல்காரனான ஆர்.கே. சுரேஷுக்கு திருமணம் செய்துவைக்கிறார் சசிகுமார். இந்தச் சூழலில் சூறாவளியை சன்னாசி காப்பாற்றினாரா? நாட்டுப்புறக் கலை என்னவானது என்பதே படத்தின் கதை.பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்கள் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்களை இயக்குநர் பாலா சித்திரித்துள்ள விதம் மனதை கனக்க வைக்கிறது. நாட்டுப்புறக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் வறுமை, புறக்கணிப்பு, பாலியல் சுரண்டல் போன்றவற்றால், அவர்கள் படும் கஷ்டத்தை இயல்பாக காட்டியிருக்கிறார்.சசிகுமார் பசிக்கிறது என்று கூறும்போது, வரலட்சுமி வெறித்தனமாக நடனமாடிப் பணத்தை ஈட்டி, சசிகுமாரை சாப்பிடுமாறு சொல்வார், அந்தக் காட்சி மனதை உருக வைக்கும். அதேபோல, இந்தப் படத்தில் அமுதவாணன் மற்றும் ஆனந்தி இருவரும் அண்ணன் - தங்கைகள். ஆனால், நடனத்துக்காக கொச்சையாக இரட்டை மொழி வசனங்களை பேசுவார்கள். அதில், ”முறை என்பது வாழ்கிற வாழ்க்கைக்குத்தான், எங்களுக்கு தெரியும் கூடப் பிறந்த பிறப்புனு. வெறும் வயித்து பிழைப்புக்காக இத பண்ணல, என் தங்கச்சி வாழ்க்கைக்காக, மானம் ரோஷத்தை விட்டுவிட்டு வாழ்றேன்” என்று சொல்வார் அமுதவாணன். அவரின் மனவேதனையை ஆழமாக காட்சியமைத்திருப்பார் பாலா.சசிகுமாரின் தந்தையாக வரும் ஜிஎம் குமார், கலையை வணிகமாக மாற்றக் கூடாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார். சசிகுமார் - ஜிஎம் குமார் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தாலும் இருவருக்குள்ளே இருக்கும் அன்பு அழகாகக் காட்டப்பட்டிருக்கும். பைத்தியம்போல காதலித்த சசிகுமாரை விட்டு, ஆர்கே சுரேஷை திருமணம் செய்யும் காட்சிகளில் வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.பாலா தன்னுடைய படங்களில் விளிம்புநிலை மனிதர்கள், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள், யாசகம் பெறுபவர்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகவும் யதார்த்தமாகவும் காட்டுவார். அதேபோலத்தான், தாரை தப்பட்டை படமும் வணிக ரீதியாக இல்லாமல், தனக்கே உரித்தான பாணியில் இயல்பாக எடுத்திருந்தார். அவரின் படங்களில் கிளைமேக்ஸ் காட்சிகளை மகிழ்ச்சியாக முடிக்காமல், யதார்த்தத்தை பிரிதிபலிக்கும் காட்சிகளோடு முடிப்பார்.கற்பனைக் கதையாகக் காட்டாமல், சமூகத்தில் நிலவும் கசப்பான உண்மைகளை எள்ளளவும் மறைக்காமல் காண்பிக்க வேண்டும் என்று நினைப்பார். வரலட்சுமியை மது அருந்தும் பெண்ணாகவும் ஆக்ரோஷமாக நடனமாடும் பெண்ணாகவும் சித்திரித்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமல்ல, படம் முழுவதுமே வரலட்சுமியின் நடிப்பு பார்ப்பவர்களுக்கு பிரமிப்பூட்டும்படியாக இருக்கும். அந்த ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்; ஏனோ அமையவில்லை.சினிமா போன்றவற்றால் நாட்டுப்புறக் கலைகள் எவ்வாறு நலிவடைகின்றன, இதனால் அவர்கள் படும் துன்பத்தைப் பார்ப்பவர்கள் கண்களுக்கே காட்சியாகக் கடத்தியிருப்பார். ஆனால், வரலட்சுமி இரண்டாம் பாதியில் அதிக நேரம் காணாமல் போயிருப்பார், அதுவே இந்தப் படத்தின் எதிர்மறை கருத்தாகப் பார்க்கப்படுகிறது.இந்தப் படத்தின் உண்மையான நாயகன் இசையமைப்பாளர் இளையராஜா என்றாலும் தவறில்லை. அவருக்கு தாரை தப்பட்டை 1000-வது படம். பாலா - இளையராஜா கூட்டணியில் பாடல்கள் எப்போதும் ஹிட் அடிக்கும்.சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் படங்களைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை படத்துக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா. இந்தப் படம் இசை தொடர்பான படம் என்பதால் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்திருந்தார்.நாட்டுப்புற இசையை அப்படியே பிரதிபலித்து, கலைஞர்கள் படும் வேதனையைப் பார்வையாளர்களுக்கு, இசை வழியே பாலா கொண்டு சேர்த்தார். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ”பாருருவாய பிறப்பற வேண்டும் பத்தியும் பெற வேண்டும்சீருருவாய சிவபெருமான் மலர்ப்பாதம் சேரவும் வேண்டும்” என்ற பாடலை சுர்முகி, சத்ய பிரகாஷ் இருவரும் பாடியிருப்பார்கள். இப்பாடலை கேட்கும்போது கண்ணீர் ஊற்றாய்ப் பெருகும். திருவாசகத்தில் மாணிக்கவாசர் எழுதிய இந்தப் பாடலுக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது.அதேபோல, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ”ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே” என்ற பாடலை ரீ-மிக்ஸ் செய்து துள்ளல் இசையோடு வழங்கியிருப்பார் இளையராஜா. வதன வதன வடிவேலனே பாடல் இன்றும் கோயில் திருவிழாக்களில் ஒலித்துக் கொண்டுள்ளது.நவீன இசைக்கருவிகளைத் தவிர்த்து, நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்படுத்தும் தவுல், நாகசுரம் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி இயல்பான இசையை வழங்கியிருந்தார் இளையராஜா. பாலாவின் காட்சிகளுக்கு உயிர் நாடியாக இருந்தது இளையராஜாவின் பின்னணி இசை. அவரின் 1000-வது படத்துக்கு தேசிய விருது கிடைத்தது அவரது இசை வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றி வாகை.பலவீன மனம் கொண்டவர்கள் தன்னிலை மறக்கும்படியாக கிளைமேக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதிக வன்முறை, குரூர காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளை கண்சிமிட்டாமல் பார்க்க வைத்திருப்பார் பாலா.இந்தத் திரைப்படம் ரசிகர்களால் சரியாகக் கொண்டாடப்படாமல் போய்விட்டென்றாலும், தமிழர்களின், நாட்டுப்புறக் கலைஞர்களின், எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான வாழ்க்கையைப் பிசிறு தட்டாமல் காட்டி, தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பார் பாலா - தாரை தப்பட்டையில்.[ஜூலை 11 - இயக்குநர் பாலா பிறந்த நாள்]Director Bala's birthday... and the film Tharai Thappattai, directed by him...