சாமானியர்களின் கலைஞன் இயக்குநர் பாலா

Wait 5 sec.

திரை உலகில் ஒரு படைப்பு என்பது வெறுமனே வணிக ரீதியாகவோ பொழுதுபோக்கு அம்சமாகவும் மட்டும் இருக்கத் தேவையில்லை. மாறாக ஒரு படைப்பு சமூகத்தின் பிரதிபலிப்புகளை, அதன் அவலங்களை, சமகால சிக்கல்களை பேசுவதாக அமைந்திருக்க வேண்டும் என்பது சமூகத்தின் மீதான அக்கறை கொண்டோரின் விருப்பம். இவ்வகை திரைத்தேர்வு படைப்பாளர்களின் விருப்பமே ஆனாலும் அதை நிஜமாக்கி தருவது அவர்களின் மனசாட்சியை ஒட்டியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் அதன் மூலாதாரங்களையும் திரையில் காட்டிய படைப்புகள் வெகு சொற்பமே. அவ்வாறு காட்டப்பட்ட படைப்புகளிலும் பேசப்பட்ட உண்மைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே அமைந்திருக்கின்றன. ”நாம் பேசாதவரை நம் வரலாற்றை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் பேசுவார்கள்” எனும் வார்த்தை எவ்வளவு நிஜமானது என்பதை இதுநாள்வரை கண்ட வணிகக் குப்பைகளின் வழி காணலாம்.உலகின் பெரும் பார்வையாளர்கள் பட்டாளத்தைக் கொண்டது இந்திய சினிமா. இதில் ஒவ்வொரு ஆண்டும் புராணங்களைப் பேசுவது, வணிக சினிமாக்கள், பிரச்சாரப் படங்கள், பொழுதுபோக்கு படங்கள் என உருவாகிக்கொண்டே இருக்கின்றன. வணிகத்தை தாண்டி எந்த இலக்குமற்ற திரைப்படங்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இந்த குவியலுக்கு மத்தியில்தான் பேசப்பட வேண்டிய கதையை வணிகமாக்க முடியும் அதை பார்வையாளர்களிடம் கடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர் இயக்குநர் பாலா. சரியாக 13 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான திரைப்படம் பரதேசி. இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, வேதிகா என பலர் நடித்துள்ளனர். அதர்வாவிற்கு வாழ்நாள் திரைப்படம் இது. காலனியாதிக்க காலத்தில் நிலவி வந்த கொத்தடிமை சமூகத்தின் நிலையை திரையில் காட்டி வென்ற திரைப்படம் இது. உழைப்பு சுரண்டல், பொருளாதார சுரண்டல், பாலியல் சுரண்டல், சூழலியல் சுரண்டல் என பல்வேறு சுரண்டல்களுக்கு மத்தியில் கொத்தடிமைகளாக்கப்பட்ட மக்கள் எப்படிப்பட்ட வாழ்வை வாழ நிர்பந்திக்கப்பட்டனர் என்பதை பேசியது பரதேசி.தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கொத்தடிமை வாழ்க்கையை பதிவு செய்த ஆங்கிலேய மருத்துவரான டேனியல் அவர்களின் ”ரெட் ட்ரீ” எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் பரதேசி. ”எரியும் பனிக்காடு” எனும் தலைப்பில் வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா. முருகவேள் அவர்கள் தமிழில் இந்த நூலை தந்துள்ளார். பச்சை பசேல் தேயிலைத் தோட்டத்திற்கு பின்னால் செக்கச் சிவந்த குருதிகள் படிந்திருப்பதை ஆழமாகவும் உண்மையாகவும் கொடுத்த நாவல் இது. ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக எளிய மக்களைப் பயன்படுத்திய சம்பவத்தை நாவலை தழுவி கொடுந்திருந்தார் இயக்குநர் பாலா. திருநெல்வேலி கருப்பனின் கதாபாத்திரமாக அதர்வாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுரண்டல் சமூக முறையில் சாதாரண எளிய மக்கள் எவ்வாறான கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை தனது திரைமொழியில் கொடுத்த பாலாவின் முயற்சி பாராட்டத்தக்கது. திரைப்படம் காட்சிப்படுத்திய பல்வேறு சம்பவங்கள் குறித்து நாம் இந்த கட்டுரையில் பேசவில்லை எனினும் அதன் முக்கியத்துவம் கவனிக்கப்பட வேண்டியது. பஞ்சம் பாதித்த தங்கள் வாழ்வையும், வயிற்றையும் காப்பாற்றிக் கொள்ள தேயிலைத் தோட்டத்திற்கு கங்காணியின் மூலம் வேலைக்கு செல்கின்றனர் சாலூர் கிராமத்தின் மக்கள். வழியெங்கும் வெயிலும், தூசியும் அவர்கள் வாழ்வில் ஒட்டிக்கொண்ட வறுமை போல படிந்திருக்கின்றன. கங்காணியின் பேச்சைக் கேட்டு பச்சை செடிகளுக்கு மத்தியில் சென்ற அந்த கிராம மக்கள் தாங்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டதை காலம் கடந்தே உணர்கின்றனர். அங்கிருந்து அவர்கள் வாழ்வு என்ன ஆனது என விரிகிறது திரைப்படம். உழைப்புச் சுரண்டல் நவீனமாகியுள்ள இந்தக் காலத்தில் காலனிய காலம் எப்படி மனிதர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைக்கு உள்ளாக்கியது என்பதை காட்சிக்கு காட்சி பேசியிருக்கிறது பரதேசி. வண்ணப் பூச்சுகளும், வெள்ளைத் தோல்களும் ஆக்கிரமித்துள்ள சினிமா உலகில் சாதாரண மக்களின் தோற்றங்களை தொடர்ச்சியாக திரையில் காட்டி வருகிறார் பாலா. பரதேசியும் அதற்கு விதிவிலக்கல்ல. சேது, நந்தா, நான் கடவுள் என நீளும் அவரது படைப்புகளே அதற்கு சாட்சி. அதற்காக அவர் வருந்துவதுமில்லை, அவமானமாகக் கருதிக் கொள்வதுமில்லை. தினசரி வாழ்வில் எளிய மக்களின் வாழ்க்கையை திரையில் காட்டும் அந்த அசட்டு தெனாவெட்டிற்கே அவர் கொண்டாடப்பட வேண்டியவர். இதுவெல்லாம் அழகு, இவையெல்லாம் அற்புதம் என வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணங்களை கிழித்து வீசும் அவரது பாணி வேறு எந்த இயக்குநரும் விரும்பி பூசிக்கொள்ளாதது. பாலாவின் எழுத்து எப்படி மற்ற இயக்குனர்களிடம் இருந்து வேறுபட்டது? அவரது கதைகள் சாமானியர்களிடம் இருந்து பெறப்பட்டவை. அவரது வசனங்கள் சாமானியர்கள் உச்சரிப்பவை. அவரது எழுத்து சாமானியர்களை சார்ந்தது. அதில் நிறை குறைகள் இருந்தாலும் அதை பிரதானப்படுத்தும் ஒரு வெற்றி இயக்குநராக அவர் நடை போடுவது இன்னும் பல புதிய இயக்குநர்களுக்கான பாதையை ஏற்படுத்தவல்லது. பரதேசி திரைப்படம் கொத்தடிமை சமூகத்தின் நிலையை பேசி இருந்தாலும் அதன் ஊடாக ஏகாதிபத்தியம், தலித்திய நிலை உள்ளிட்ட பல கோணங்களை கூர்மையாக கவனப்படுத்த விரும்பியிருக்கிறது. அதை நிறைவேற்றி இருக்கிறதா என்றால் அது விவாதத்திற்குரியது. எனினும் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கும் இன்றைய கால வசதிகளுக்கு மத்தியில் கால் நரம்பு அறுபட்டு கிடக்கும் கடந்த கால மனிதனின் குரலை திரையில் ”நியாயமாரே....” என அவர் கத்த விட்டது நம் தலைமுறையின் கேட்கப்படாத குரலை ஒவ்வொரு திரைக்குள்ளும் ஆவணப்படுத்திய முயற்சி. பரதேசி திரைப்படத்தை மீள் ஆய்வாகக் கொண்டால் அதில் குறைபாடுகள் இருக்கலாம். பேசப்பட வேண்டிய விஷயங்கள் இன்னும் கவனப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம். தலித்திய பிரச்னைகள், மருத்துவர் டேனியல் கதாபாத்திரம் கையாளப்பட்டது, நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியத்தின் நிலை என அது பேச மறந்த விசயங்கள் இருக்கவே செய்கின்றன. எனினும் மாற்று சினிமாவை வெகுஜன பார்வையாளர்கள் ஏற்கும் வகையில் கொடுத்திருப்பது நம்பிக்கைகுரிய தமிழ் சினிமாவின் முன்னேற்றம்.கொத்தடிமை சமூகத்தின் அவல நிலையை இனி எவரும் காட்சிப்படுத்த விரும்பினால் அவர்கள் பரதேசியை தாண்டியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதே பாலா எனும் படைப்பாளுமைக்கான சான்று. வாழ்த்துகள் பாலா.