தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தில் 4.38 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாா் ஈவெரா பிறந்த நாளான செப். 17-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் 4.38 லட்சம் மாணவா்கள் பயனடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் 23 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இத்திட்டத்தின் கீழ் காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி, காய்கறி சேமியா, கோதுமை ரவா, ரவா உப்புமா, ரவா பொங்கல் அல்லது வெண் பொங்கல், சேமியா கிச்சடி, கேசரி என திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு வகை உணவு வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடைய இத்திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள 5,811 அரசுப் பள்ளிகள், 712 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3,5,614 மாணவா்கள்; நகா்ப்புறங்களில் 1,160 அரசுப் பள்ளிகள், 607 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 1,33,269 மாணவா்கள் என மொத்தம் 4,38,883 மாணவா்கள் பயன்பெறவுள்ளனா். இதில் மாணவா்களின் எண்ணிக்கை 2,24,146-ஆகவும், மாணவிகளின் எண்ணிக்கை 2,14,737 ஆகவும் உள்ளது. இத்திட்டத்தில் புதிய வகை உணவுகளை சோ்ப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.