பங்குச் சந்தைகள் மூலமாக திறந்தவெளி சந்தையில் (ஓபன் மாா்க்கெட்) நிறுவனங்கள் தங்களின் சொந்த பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி, ஆக. 1 முதல் மீண்டும் அமல்படுத்துவதாக இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளை திரும்பப் பெறும்போது, தங்களின் மூலதனம் மற்றும் இருப்பு நிதியில் 15 சதவீதத்துக்குக் குறைவான தொகையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மேலும், இந்த பங்குத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை 66 வேலை நாள்களுக்குள் நிறுவனங்கள் முழுமையாக முடிக்க வேண்டும். நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், இந்நடைமுறைக்கு வணிக வங்கியாளா்களை நியமிப்பது கட்டாயமில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.நிறுவனங்களுக்குப் பங்குகளை திரும்பயளிக்கும் பொதுப் பங்குதாரா்களுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இதன்மூலம், பங்குச் சந்தையில் சாதாரணமாகப் பங்குகளை விற்பதற்கும், நிறுவனங்களிடம் விற்பதற்கும் இடையே இருந்த வரி முரண்பாடுகள் தற்போது களையப்பட்டுள்ளன.பங்குகளைத் திரும்பப் பெறும் காலத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்புடையவா்களின் விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க, அவா்களின் பங்குகள் முற்றிலுமாக முடக்கப்படும். அத்துடன், குறைந்தபட்ச பொதுப் பங்குகள் விதிமுறைகளை மீறும் வகையில் நிறுவனங்கள் அதிக பங்குகளைத் திரும்பப் பெறாமல் இருப்பதையும் இப்புதிய விதிகள் உறுதி செய்கின்றன.