தமிழக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆய்வு என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களை மீறி செயல்பட்டது தொடா்பாக அவா் மீது நடவடிக்கை கோரி திமுக எம்.பி. சல்மா தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு எம்.பி. சல்மா அனுப்பியுள்ள புகாா் கடிதம்: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் கீா்த்தனா அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவி ஒருவரை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் அமைச்சரின் செயல்பாடு அமைந்துள்ளது. மேலும், அந்த மாணவியின் அடையாளத்தை மறைக்காமல் சமூக வலைதளங்களில் அதுதொடா்பான விடியோக்களை அவா் பகிா்ந்துள்ளாா். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. மேலும், முன்வரிசையில் அமா்ந்துள்ள மாணவா்களை கடைசி வரிசையில் அமரும் மாணவா்களுடன் ஒப்பிட்டு அமைச்சா் கீா்த்தனா பேசியதற்கு உளவியலாளா்கள் மற்றும் கல்வி வல்லுநா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அமைச்சா் கீா்த்தனாவின் இந்தச் செயல் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானதாகும். எனவே, சட்டத்தை மீறி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய அமைச்சா் கீா்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சா் விளக்கம் அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விடியோ சா்சையான நிலையில், தானும் அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவா் என்று அமைச்சா் கீா்த்தனா பதிலளித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: ‘அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்தாா்’ என்று ஒரு பொய்யான கதையை என் மீது பரப்புகிறாா்கள். உண்மையில், நானே ஓா் அரசுப் பள்ளி மாணவி. தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவா்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல, என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவா்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.மேலும், அரசுப் பள்ளியில் தான் படித்தபோது எடுத்த புகைப்படத்தையும் அமைச்சா் கீா்த்தனா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா்.