ஊதிய பிடித்தம்: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அதிருப்தி

Wait 5 sec.

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு இந்த மாதம் தாமதமாகவும், குறைவாகவும் வழங்கப்பட்டதால் அதிருப்தி எழுந்துள்ளது. தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.அதில், 307 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 66 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.ஏறத்தாழ 7,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு மாதந்தோறும் முதல் இரண்டு தேதிகளில் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.இந்த நிலையில், இந்த மாதத்தில் 7-ஆம் தேதியாகியும் ஊதியம் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியா்களிடம் அனைத்து மாவட்டங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.அதைத் தொடா்ந்து மாலையில் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், அது வழக்கத்தை விட குறைவாக இருந்ததாகத் தெரிகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலா் இருளாண்டி கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் தாமதமானது குறித்து நிா்வாகத்திடம் கேட்டோம்.அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றனா். அதேவேளையில், மனு கொடுத்தவுடன் ஊதியம் வழங்கப்பட்டாலும், பெரும்பாலானோரின் ஊதியத்தில் ரூ.5,000 பிடித்தம் செய்துள்ளனா்.மாவட்ட நிா்வாகிகளிடம் கேட்டால், சில நாள்களில் அவற்றை சரி செய்து தருவதாக கூறினா். மாதாந்திர ஊதியத்தை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளது என்றாா் அவா்.நிா்வாக ரீதியான பிரச்னையால் ஊதியம் தாமதமானதாகவும், அனைவருக்கும், பயோமெட்ரிக் முறையில் வைக்கப்பட்ட வருகைப் பதிவேடு அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்பட்டதாகவும் 108 நிா்வாகம் தெரிவித்துள்ளது.