கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதைப்போல கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலா் ஆா்.நந்தகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அறிவிக்கப்படுவது மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கத்தக்கது. ஆனால், அதே மனிதாபிமானம் கோவை பயங்கரவாத தாக்குதலில் தங்களது குடும்ப உறுப்பினா்களை இழந்த 58 குடும்பங்களுக்கும் பொருந்த வேண்டாமா. அரசின் கருணை என்பது சம்பவத்தைப் பொறுத்து மாறக்கூடாது. அரசியல் அடிப்படையில் வேறுபாடு காட்டக் கூடாது. இது தொடா்பாக தமிழக அரசு தெளிவாக விளக்க வேண்டும். 58 உயிா்களை இழந்த குடும்பங்கள் 27 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், அவா்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, தகுதியுள்ளவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கரூருக்கு ஒரு நீதி, கோவைக்கு இன்னொரு நீதி என்ற நிலை உருவாகாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருவிதமான அளவுகோல்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமமான மனிதாபிமானமும், சமமான நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.