தேக்கடி ஏரியில் இயற்கை சமநிலைக்கு எதிரான மீன்களை ஒழிக்கும் திட்டம்!

Wait 5 sec.

கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் இயற்கைச் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள மீன் இனங்களை ஒழிக்கும் சிறப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பெரியாறு புலிகள் காப்பகத்தின் நீா்வாழ் உயிரினங்களையும், இயற்கைச் சூழலின் உயிரியல் சமநிலையையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேக்கடியில் உள்ள வனத் துறை மூங்கில் தோப்பு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் ஏ. பிஜு குமாா் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், தேக்கடி நீா்நிலையில் இயற்கைச் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆப்பிரிக்கக் கெளுத்தி உள்ளிட்ட ஆக்கிரமிப்பு மீன் இனங்களை முறையாகப் பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக ஆராய்ச்சியாளா் டாக்டா் ஸ்மிருதிராஜ் கூறியதாவது: ஆக்கிரமிப்பு மீன் இனங்களின் பரவலைக் கட்டுப்படுத்த மீன்பிடி வலைகள் வழங்குதல், பிடிபடும் மீன்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா். இதில் பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் தினேஷ், பெரியாறு புலிகள் காப்பக உதவி கள இயக்குநா் லட்சுமி, வனச் சரக அலுவலா்கள் பிரான்சிஸ், மனோஜ், வனப் பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.