சிவகங்கை மாவட்டம், இளங்குடி ஊராட்சிக்கு உள்பட கருகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட கருகுடி கிராமத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜயின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த 16 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 144 வீரா்கள் கலந்து கொண்டனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையை 9 போ் அடங்கிய குழுவினா் 20 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகளை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கழக நிா்வாகி விவேக் செய்திருந்தாா். போட்டியை திரளானோா் கண்டுகளித்தனா். போட்டிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் கழக நிா்வாகி ஆருன் ஜாா்ஜ், கல்லல் ஒன்றிய இணைச் செயலா் பிகில் ஹரி பிரசாத், கழக நிா்வாகிகள் ஈடுபட்டனா்.