தமிழக கடலோரம் எதிர்கொள்ளும் போதை பயங்கரவாதம்!

Wait 5 sec.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை ஆய்வு செய்யும் மத்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றின் கவனத்தை தற்போது தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள கடலோரப் பகுதிகள் அதிகம் ஈர்த்துள்ளன. இது வெறும் சட்டம்-ஒழுங்கு சார்ந்த பிராந்தியப் பிரச்னை அல்ல; மாறாக, இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் ஒரு சர்வதேச போதை பயங்கரவாதம் வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.புவிசார் கடல்வழிப் பாதையும் அரசியலும்: இந்தியாவின் சுமார் 7,516 கி.மீ. நீளமுள்ள கடலோரத்தில் தமிழ்நாட்டின் 1076 கி.மீ. கடலோரப் பகுதிகள் மிக முக்கியமானவை. சர்வதேச கடல் எல்லையான 'பாக் நீரிணை' மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால், இவை கடத்தல்காரர்களின் பிரதான இலக்காக மாறுகின்றன.மத்திய உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஹாஜி சலீம் போன்றோரின் வலையமைப்புகள், அரபிக் கடல் வழியாக குஜராத் மட்டுமன்றி, லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பாதைகளைப் பயன்படுத்தி தமிழக கடல் பகுதியை அடைய முயல்கின்றன.விழிஞ்ஞம் ஆயுத வழக்கு விவகாரத்தில் என்ஐஏ பதிவு செய்த வழக்குக்குப் பிறகு, திருச்சியில் உள்ள வெளிநாட்டினர் சிறப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனைகளில் இது தொடர்பான முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்குகளில் எல்லாம் களத்தில் பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே தவிர, மூல காரணமானவர்கள் கைதாவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹாஜி சலீம்" போதைப் பொருள் ரகசிய கும்பல், இலங்கையைச் சேர்ந்த சில சட்டவிரோதக் குழுக்களுடன் இணைந்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே 47 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக் களைக் கடத்தியபோது அந்த சதித் திட்டம் இந்திய கடற்படையால் நடுக்கடலில் முறியடிக்கப்பட்டது.அந்த வழக்கின் ஆழமான புலனாய்வு, கடத்தப்பட்ட பொருள்களின் இறுதி இலக்கு தமிழக கடற்கரை என்பதையும், இதன்மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய் 'ஹவாலா' மற்றும் கிரிப்டோ கரன்சி மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்குச் சென்றடைவதையும் இரண்டு ஆண்டு புலனாய்வு உறுதிப்படுத்தியுள்ளது.வெகு சமீபத்திய நடவடிக்கையாக, கடந்த மே மாதம், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தின் 19 இடங்களில் ஒரே நேரத்தில் என்ஐஏ சோதனைகளை நடத்தியதில், வணிக ரீதியிலான லாரி ஒன்றிலிருந்து 89,600 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 10,500 டெட்டனேட்டர்கள் போன்ற பெருமளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மாநில எல்லை சோதனைகளைத் தாண்டி, வணிக ரீதியிலான பெருமளவிலான வெடிபொருள்கள் கடத்தப்பட்டிருப்பது, உள்நாட்டுப் பாதுகாப்பில் உள்ள முறையான குறைபாட்டை வெளிப்படுத்துவதால்,இதில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.அத்துடன், இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள 'நிதிப் பரிமாற்றம் கடல் வழியாகத் தமிழகத்துக்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருள்கள், தென் மாநில நகரங்கள் மூலம் கேரளம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஆஸ்தி ரேலியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கைக்கும் கடத்தப்படுவது தொடர்வதாக உளவு அமைப்புகள் கவலை கொண்டுள்ளன.இதன்மூலம் ஈட்டப்படும் பல கோடி ரூபாய் லாபம், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பதுங்கு செயல்பாடுகளுக்கும், ஆயுதக் கொள்முதலுக்கும் பயன்படுத்தப்படு வதாக தேசிய புலனாய்வு முகமை' மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை (என்சிபி) பதிவு செய்துள்ள வழக்குகள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.ஒருங்கிணைப்பு சவால்! இந்திய அரசமைப்பின்படி சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலின் கீழ் வருகிறது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் சர்வதேசக் கடத்தல் தடுப்பு ஆகியவை மத்திய பட்டியலின் கீழ் வருகின்றன. இந்த இரண்டு நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு இடைவெளியைத்தான் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கடலோரப் பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை, மாநிலங்களின் கடல்சார் பாதுகாப்புப் படை ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில உளவுத்துறைக்கும். மத்திய உளவு அமைப்புகளுக்கும் இடையேயான "உடனடித் தகவல் பரிமாற்றம் இன்னும் முழுமையான வேகத்தை எட்டவில்லை என்ற விவாதம் தில்லியின் கொள்கை வட்டாரங்களில் தொடர்ந்து நீடிக்கிறது.இந்த அச்சுறுத்தலை முறியடிக்க பல்வேறு நவீன உத்திகளை மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. அதில் முதன்மையானது 'டீப் டெக் மானிட்டரிங்' எனப்படும் ஆழ் தொழில்நுட்பக் கண்காணிப்பு. இதன்படி கட லோரப் பகுதிகளில் ரேடார் வலைய மைப்புகள் மற்றும் இஸ்ரோ செயற்கைக் கோள் மூலமான படகு கண்காணிப்பு முறையை அமல்படுத்துவது. இதை 20 டன் எடைக்கும் குறைவான சிறிய மீன்பி டிப் படகுகளுக்கும் கட்டாயமாக்குவது முக்கியமான யோசனை.அடுத்ததாக, மத்திய-மாநில கூட்டு அதிரடிப் படையை பிரத்யேகமாக நிறுவுவது. இதில் என்சிபி, என்ஐஏ, தமிழகத் தின் 'க்யூ' பிரிவில் தேர்ச்சி பெற்ற காவல் துறையினரை இடம்பெறச் செய்து நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவது முக்கியமான யோசனையாகும்.இதேபோல, போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சொத்துகளை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் பணப் பரிவர்த்தனை மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம் எல்ஏ) சட்டங்களின் கீழ் அமலாக்கத் துறை இயக்குநரகம் நேரடியாக முடக்குவதை தீவிரப்படுத்துவது அவசியம் என்கின்றனர் துறை ஆய்வாளர்கள்.தமிழ்நாட்டின் பாதுகாப்பு என்பது வெறும் ஒரு மாநிலத்தின் எல்லைப் பாதுகாப்பு அல்ல, அது இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டுப் பாதுகாப்பின் அடித்தளம். மத்திய அரசின் கொள்கை முடிவுகளும், சென்னை கோட்டையின் களச் செயல்பாடுகளும் ஒரே நேர்கோட்டில் இணையும்போது மட்டுமே இந்த சர்வதேச போதை பயங்கரவாத சங்கிலியை முற்றிலுமாக உடைக்க முடியும் என்கின்றனர் மத்திய உள் துறை அதிகாரிகள்.The menace of drug-related terrorism facing the Tamil Nadu coast