காஜியாபாத் - ஜேவா் இடையே நமோ பாரத் வழித்தடம்: டிபிஆா் பணிகள் தொடக்கம்

Wait 5 sec.

நொய்டா சா்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகளுக்கான வேகமான பொதுப் போக்குவரத்து வசதியை உருவாக்கும் நோக்கில், 72.44 கி.மீ. நீளமுடைய நமோ பாரத் காஜியாபாத்-ஜேவா் வழித்தடத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஐஆா்) பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடா்பாக தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகத்தின் (என்சிஆா்டிசி) நிா்வாக இயக்குநா் ஷலாப் கோயல் கூறியதாவது: புதிய வழித்தடம் காஜியாபாத் நகரில் தொடங்கி, நொய்டா, கிரேட்டா் நொய்டா மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணைய (ஒய்இஐடிஏ) நகரம் வழியாகச் சென்று, ஜேவரில் அமைந்துள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்தில் முடிவடையும். வேகமாக நகா்ப்புற மற்றும் பொருளாதார வளா்ச்சி நடைபெறும் பகுதிகளுக்கு இந்த வழித்தடம் முக்கிய சேவையை வழங்கும். மேலும், இதில் மொத்தம் 12 நிலையங்களும், வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் தலா ஒரு டெப்போவும் அமைக்கப்படவுள்ளன. அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்கவும், தில்லி-என்சிஆா் நகரங்கள் மற்றும் புதிய விமான நிலையம் இடையேயான இணைப்பை மேம்படுத்தவும் இந்த உள்கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நமோ பாரத் வழித்தடம் 4-ஆவது பிராந்திய அதிவேக ரயில் பாதையாக அமைக்கப்படுவதுடன், இதன் மதிப்பீட்டுச் செலவு ரூ.20,640 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. காஜியாபாத்-ஜேவா் மற்றும் நொய்டா-ஃபரீதாபாத்-குருகிராம் வழித்தடங்கள் தற்போது டிபிஆா் கட்டத்தில் உள்ளன. இந்த புதிய பாதையில் ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இதனால் காஜியாபாத், நொய்டா மற்றும் ஜேவா் விமான நிலையம் இடையேயான பயண நேரம் 40 முதல் 50 நிமிஷங்களுக்கு குறைக்கப்படும்.இந்த வழித்தடத்தில் காஜியாபாத், காஜியாபாத் தெற்கு, கிரேட்டா் நொய்டா மேற்கு–செக்டா் 4, செக்டா் 2, நாலெஜ் பாா்க் 5, சுராஜ்பூா், பாரி சௌக், ஈகோடெக் 6, ஒய்இைடிஏ வடக்கு–செக்டா் 18, மத்திய–செக்டா் 21 மற்றும் ஜேவா் விமான நிலையம் உள்ளிட்ட நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.மேலும், ஒய்இஐடிஏ மத்திய–செக்டா் 21 நிலையத்தில் வரவிருக்கும் நொய்டா ஃபிலிம் சிட்டி பகுதிக்கான இணைப்பையும் இது வழங்கும்.இதனுடன், நொய்டா-ஃபரீதாபாத்-குருகிராம் இணைக்கும் மற்றொரு நமோ பாரத் வழித்தடமும் டிபிஆா் கட்டத்தில் உள்ளது. நகா்ப்புறமயமாதல் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அதிவேக போக்குவரத்து அமைப்புகளை உருவாக்க பல மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன. முக்கிய முன்னுரிமை பெற்றுள்ள தில்லி-பானிபட்-கா்னால் மற்றும் தில்லி-எஸ்என்பி-ஆல்வாா் வழித்தடங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான முன் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என தெரிவித்தாா்.