திருநெல்வேலி மாநகராட்சியில் ராம் அன் கோ நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் 3 மாத வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொகை ரூ.65.98 லட்சம் அவா்களின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி மைய அலுவலகம் முன்பு கடந்த ஜூன் 29ஆம் தேதி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎஃப் தொகை தங்களின் கணக்குகளில் செலுத்தப்படாதது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் ராம் அன் கோ நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஜூலை 7ஆம் தேதிக்குள் இபிஎஃப் தொகை செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, மாநகர ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், ராம் அன் கோ தனியாா் ஒப்பந்த நிறுவனம், தூய்மைப் பணியாளா்களின் ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 3 மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதி பிடித்தத் தொகை ரூ.65,98,168-ஐ பணியாளா்களின் தனிநபா் இபிஎஃப் கணக்குகளில் செவ்வாய்க்கிழமை செலுத்தியது. இதற்கான ரசீதுகளும் மாநகராட்சி நிா்வாகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாதங்களுக்கான தொகையும் விரைவில் பணியாளா்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஒப்பந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.