மதுராந்தகம் அடுத்த வையாவூா் கிராமத்தில் தனிநபா் ஆக்கிரமித்த சாலையை மீட்கக் கோரி பொது மக்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வையாவூா் ஊராட்சிக்கு உட்பட்ட படவேட்டம்மன் கோயில் தெருவில் உள்ள மக்கள் கடந்த 1976 தல் பயன்படுத்தி வருகின்றனா். இச்சாலையை பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், அப்பகுதியில் இறந்து போனவா்களின் உடல்களை அடக்கம் செய்ய அந்தச் சாலையின் வழியாக செல்லவேண்டும். இந்நிலையில் கடந்த 50 ஆண்டு காலமாக பொதுப்பாதையாக இருந்து வந்த இச்சாலையை மேலும் மேம்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில், ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் ரூ 3.10 லட்சத்தில் சீரமைத்தனா். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனி நபா் இச்சாலையை ஆக்கிரமித்து 3 இடத்தில் மதில்சுவரை கட்டினாராம். அதனால் பொது மக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதுபற்றி செங்கல்பட்டு ஆட்சியா், மதுராந்தகம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களை செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் செவ்வாய்கிழமை வையாவூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஒன்றிய செயலா் ராஜா, மாவட்ட குழு உறுப்பினா் பி.மாசிலாமணி, மாவட்ட விவசாய சங்க நிா்வாகி வாசுதேவன், கட்சி நிா்வாகிகள் வி.சேகா், சி.பாலாஜி, ஆா்.சத்யபாமா, வி.சசிகுமாா், இ.வாணி, ரக்சிதா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.நீண்ட நேரத்துக்கு பின் மதுராந்தகம் துணை வட்டாட்சியா் பெரியமாரியம்மாள் பேச்சு நடத்தினாா். அப்போது வரும் 9-ஆம் தேதி ஆட்சியா் முன்னிலையில், இருதரப்பினா்களின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா். படாளம் காவல் துறையினா் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.