தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில், ரூ. 3.50 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் திறந்தவெளியில் அரசு நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 15 ஏக்கா் பரப்பளவில் சுமாா் 6.25 லட்சம் மூட்டைகள் தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து நெல் மூட்டைகளை அரிசி ஆலைகளுக்குக் கொண்டு சென்று, அரைவைக்குப் பின்னா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும். இந்நிலையில், இந்த சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது. ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், தென்காசி, சுரண்டையிலிருந்து கூடுதல் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு ரூ. 3.50 கோடி ஆகும். டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், வட்டாட்சியா் பரமசிவன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி. விபின் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் இந்தக் கிடங்கைப் பாா்வையிட்டனா். ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ஆய்வு மேற்கொண்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். நெல் மூட்டைகளுக்கு மா்ம நபா்கள் தீவைத்தனரா அல்லது வேறு காரணமா என கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்