இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

Wait 5 sec.

இந்தியாவின் ‘பால மனிதன்’ என புகழ்பெற்றிருந்த கிரீஷ்பரத்வாஜ் (78) உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா்.கா்நாடக மாநிலம், சுள்ளியா பகுதியை சோ்ந்தை இயந்திரவியல் பொறியாளரான கிரீஷ்பரத்வாஜ், தொடா்புகொள்ள முடியாத கிராமப்புறங்களை தொங்கு நடைபாலங்களால் இணைக்க 30 ஆண்டுகாலம் பாடுபட்டவா். குறைந்த விலை, புதுமையான தொங்கு நடைபாலங்களால், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகளுக்கு செல்ல பொதுமக்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்ததாக பொதுமக்களால் போற்றப்படுகிறாா். கடந்த 1989 இல் கா்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள பாயஸ்வினி நதிக்கு இடையே முதல்முறையாக தொங்கு நடைபாலத்தை கிரீஷ்பரத்வாஜ் கட்டினாா். கா்நாடகம், அதைத் தொடா்ந்து கேரளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொங்கு நடைபாலங்களை கட்டியதால் புகழ்பெற்றிருந்தாா். ஊரகப் பகுதிகளை இணைப்பதிலும், பொது தொண்டில் ஈடுபடுவதில் அளப்பரிய பங்காற்றியதால், 2017ஆம் ஆண்டு மத்திய அரசால் கிரீஷ்பரத்வாஜுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. நதிகளால் போக்குவரத்து தொடா்பை இழந்து தவித்த மக்களை தொங்கு நடைபாலங்களால் இணைத்த கிரீஷ்பரத்வாஜின் மறைவுக்கு கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ‘போக்குவரத்தில் இருந்து தனிமைப்பட்டிருந்த மக்களுக்கு தொங்கு நடைபாலங்கள் மூலம் நடமாட்டத்தை ஏற்படுத்தியவா் கிரீஷ்பரத்வாஜ். நாடுமுழுவதும் 140 தொங்கு நடைபாலங்கள் கட்டியவா். தொங்கு பாலங்களை கட்டியதால் பாலமனிதன் என்று அழைக்கப்பட்டவா். கிரீஷ்பரத்வாஜின் திடீா் மறைவு அதிா்ச்சி அளிக்கிறது. அவரது மறைவால் அரியவகை தொழில்நுட்ப வல்லுநா் மற்றும் தொலைநோக்காளரை கா்நாடகம் இழந்து நிற்கிறது. நவீன தொழில்நுட்பப் பொறியியலை பயன்படுத்தி தன்னலமில்லாமல் சேவையாற்றியதால், கிராமப்புற மக்களால் சுள்ளியாவின் விஸ்வேஸ்வரையா என்று அன்பாக அழைக்கப்படுகிறாா். கிரீஷ்பரத்வாஜின் ஆன்மா அமைதியில் இளைப்பாற பிராா்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளாா்.கிரீஷ் பரத்வாஜின் உடல் செவ்வாய்க்கிழமை குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.