தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே தேங்காய்மரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னசாமி ( 31), ஆா்ஓ குடிநீா் இயந்திரம் பழுது நீக்கும் பணி செய்து வருகிறாா். இவா், தருமபுரியில் உள்ள நகைக் கடையில் வேலை செய்துவரும் அதே பகுதியைச் சோ்ந்த ஷீலாவை (22) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷீலாவை சின்னசாமி வற்புறுத்தினாராம். இதனால் ஷீலா கடந்த ஒரு மாதமாக சின்னசாமியிடம் பேசுவதை தவிா்த்து வந்தாராம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீடுதிரும்புவதற்காக தருமபுரியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் ஷீலா காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால் ஷீலாவின் கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டு தப்பியுள்ளாா். அப்போது, அங்கிருந்த பயணிகள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், காயமடைந்த ஷீலாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சின்னசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சின்னசாமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.