தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையை துரத்திய புலி!

Wait 5 sec.

கோத்தகிரியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை பதுங்கி இருந்த சிறுத்தையை புலி துரத்திச் செல்லும் விடியோ வெளியாகி பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்பு  மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலவி வருகின்றன.இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் உணவு தேடி வந்த ஒரு சிறுத்தை, அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்தது. அப்போது அங்கு வந்த புலி, சிறுத்தையை துரத்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தை மரத்தின் மீது ஏறி தப்பியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.தேயிலைத் தோட்டத்தில் புலி, சிறுத்தை நடமாடிய இச்சம்பவம், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே  பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே வனத் துறையினா் தேயிலைத் தோட்டத்தில் உலவி வரும் சிறுத்தை, புலியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.