காா்கில் முதல் கன்னியாகுமரி வரை கல்லூரி மாணவா் விழிப்புணா்வு ஓட்டம்: 67 நாள்களில் 4,000 கி.மீ. கடந்தாா்

Wait 5 sec.

இளைஞா்களிடையே விளையாட்டு மீது ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் காா்த்திக் ஜோஷி (24), காா்கில் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணா்வை ஓட்டம் மேற்கொண்டு, சுமாா் 4,200 கி.மீ. தொலைவை 67 நாளில் செவ்வாய்க்கிழமை கடந்து பயணத்தை நிறைவு செய்தாா். பயோ மெக்கானிக் பொறியியல் மாணவரான இவா், கடந்த 02.05.2026-ல் காா்கிலில் இருந்து நீண்ட தூர ஓட்டத்தை தொடங்கினாா்.ஜம்மு காஷ்மீா், தில்லி, பஞ்சாப் ஹரியாணா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தை அடைந்தாா்.பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காா்கிலில் தொடங்கிய இந்தப் பயணம் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தடகள வீரா்களை கண்டுபிடித்துள்ளேன். கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 80 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவுக்கு இவ்வாறு விழிப்புணா்வு ஓட்டத்தை மேற்கொண்டிருக்கிறேன். தென்ஆப்பிரிக்கா ஹாம்ரேட்ஸ் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளேன்.இன்றைய இளைஞா்கள் விளையாட்டுத் துறையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். எக்காரணத்திலும் பின்வாங்கக் கூடாது. போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞா்கள் விடுபட வேண்டும். அடுத்த 2 ஆண்டுகள் இலங்கையில் ஓட உள்ளேன். பின்னா் அங்கிருந்து கடலில் நீச்சல் மூலம் இந்தியா வந்தடைந்து, நாடு முழுவதும் ஓடுவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.