பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு! அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு நீட்டிக்கப்பட்ட அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டது. இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் பங்கேற்று, நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசியது: கூடலூா் பகுதி மாணவா்கள் பள்ளி செல்ல போதிய பேருந்து வசதியின்றி சிரமத்துக்குள்ளாவதாக சமூக ஊடகங்களின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தினமும் காலை 7.10 மணிக்கு பொன்னமராவதி-கூடலூா் வரை (வழி பனையப்பட்டி) காலை 8.05 மணிக்கு கூடலூா் முதல் பொன்னமராவதி வரை, மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை முதல் குழிபிறை வழியாக கூடலூா், மாலை 4.45 மணிக்கு கூடலூரிலிருந்து புதுக்கோட்டைக்கும் இயக்கப்படும் என்றாா். தொடா்ந்து அமைச்சா் கூடலூரிலிருந்து பனையப்பட்டிக்கு சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு மாணவா்களுடன் பேருந்தில் பயணித்தாா். விழாவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா, போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல மேலாளா் முகமதுநாசா், துணை மேலாளா் காா்த்திகேயன், மாவட்டக்கல்வி அலுவலா் புஷ்பலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.