மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது, எச்பிசிஎல் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து, அங்கிருந்த 3000 எரிவாயு உருளைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.வெள்ளம் அடித்துச் செல்லும்போது அதில் ஏராளமான சிலிண்டர்கள் உருண்டு ஓடுவதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கனமழை காரணமாக, எரிவாயு நிரப்பும் ஆலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, அங்கே வைக்கப்பட்டிருந்த உருளைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவை அனைத்தும் படல்கங்கா ஆற்றில் சேர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.பலரும், அந்த ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் நின்றுகொண்டு, ஆற்றில் எரிவாயு உருளைகள் அடித்துச் செல்லப்படுவதை விடியோ எடுத்துள்ளனர்.இது குறித்து எச்பிசிஎல் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மக்கள் எங்கேனும் சிலிண்டர்கள் கரை ஒதுங்கியிருப்பதைப் பார்த்தால், உடனடியாக நிறுவனத்துக்குத் தகல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.எரிவாயு உருளைகள் அனைத்துமே காலியானவை அல்ல, சில எரிவாயு உருளைகள் எரிவாயு நிரப்பப்பட்டும் உள்ளன. அருகில் உள்ள எந்த எச்பிசிஎல் நிறுவனமாக இருந்தாலும், தாசில்தார் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்கூட, எரிவாயு உருளைகளை ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களைப் பார்க்கும் பொதுமக்கள் அதனைத் தூக்கிச் செல்வதோ, வீட்டில் பயன்படுத்த திறப்பதோ, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.