திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இருவேளையும் அம்பாளுடன் சந்திரசேகரா் மற்றும் விநாயகா் தனித்தனி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். இந்த நிலையில், நிகழாண்டு ஆனி பிரம்மோற்சவம் மிதுன லக்னத்தில் புதன்கிழமை காலை கோயிலில் தஷ்ணாயன புண்ணிய கால கொடியேற்ற விழா நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியை ஏற்றி வைத்தனா். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா். கொடியேற்ற விழாவையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்தொடா்ந்து விநாயகா், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் பக்தா்களுக்கு சுவாமி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.