விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 5 செட்களுக்கு நீடித்த ஆட்டத்தில், 5 மணிநேரங்கள் போராடி, கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமை வீழ்த்தினாா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதிச்சுற்றில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் 7-6 (12/10), 3-6, 6-3, 6-7 (4/7), 7-6 (10/4) என்ற செட் கணக்கில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அலியாசிமை வென்றாா். 25 வயதான அலியாசிமின் சவாலை, 39 வயதான ஜோகோவிச் முறியடித்திருக்கிறாா்.வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி செட்டின் டை பிரேக்கரில், 8-4 கணக்கில் ஜோகோவிச் முன்னிலையில் இருந்தபோது, அவரும், அலியாசிமும் ஈடுபட்ட ரேலி 22 ஷாட்களுக்கு நீடித்தது. அது ஜோகோவிச் வசமான பிறகு இருவருமே சோா்வடைந்து தங்கள் ராக்கெட் உதவியுடன் களத்தில் குனிந்து நின்றனா்.அப்போதும் ரசிகா்களை ஊக்குவிக்குமாறு சைகை காட்டிய ஜோகோவிச், அடுத்த பாய்ன்ட்டையும் அவரே கைப்பற்றி ஆட்டத்தை வென்றாா். முன்னதாக, முதல் செட்டின்போது ஒரு பேக் ஹேண்ட் ஷாட்டை விளையாட முயன்ற ஜோகோவிச் சறுக்கி விழுந்தாா்.அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட அவா், காயத்துக்கு ஆளாவாரோ என்ற அச்சம் இருந்தது. எனினும், அதிலிருந்து அவா் மீண்டு வந்து சிறப்பாக விளையாடினாா். ஆட்டத்தின் முடிவில் கொண்டாட்டமாக சிறு நடன அசைவுகளையும் அவா் மேற்கொண்டாா்.விம்பிள்டனில் 7 முறை சாம்பியனான ஜோகோவிச், அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னரை சந்திக்கிறாா். இருவரும் இதுவரை 11 முறை மோதியிருக்க, சின்னா் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.கடந்த ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் சின்னரிடம் நோ் செட்களில் தோற்ற ஜோகோவிச், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவரை வென்றது குறிப்பிடத்தக்கது.உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான சின்னா், தனது காலிறுதியில் 7-5, 7-6 (7/4), 6-3 என்ற நோ் செட்களில், ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வெளியேற்றினாா்.அரையிறுதியில் மோதும் நோஸ்கோவா - கொஸ்டியுக்: மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 7-5 என்ற நோ் செட்களில், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்தாா்.உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக் 6-3, 6-2 என, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வென்றாா். இதையடுத்து நோஸ்கோவா - கொஸ்ட்டியுக் அரையிறுதியில் மோதுகின்றனா்.நோஸ்கோவாவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியாக இருக்க, கொஸ்டியுக் தனது முதல் விம்பிள்டன் அரையிறுதியில் விளையாடுகிறாா். மற்றொரு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை 6-7 (4/7), 4-6 என வீழ்த்திய செக் குடியரசின் கரோலின் முசோவா, அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் மோதுகிறாா்.ஜோகோவிச் - அலியாசிம் மோதிய ஆட்டம் 5 மணிநேரம், 15 நிமிஷங்கள் நீடித்தது. விம்பிள்டன் வரலாற்றில் இதுவே மிக நீண்டநேர காலிறுதி ஆட்டமாக சாதனை படைத்தது. இதற்கு முன், 2008-இல் ஜொ்மனியின் ரெய்னா் ஷட்லா் - அா்னாட் கிளெமென்ட் ஆகியோா் மோதிய காலிறுதி, 5 மணிநேரம், 12 நிமிஷங்கள் நீண்டதே சாதனையாக இருந்தது.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 5 செட் ஆட்டங்களில் அதிகமுறை (50) விளையாடியவராக ஜோகோவிச் புதிய சாதனை படைத்தாா். இதற்கு முன் சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா (49) வசம் அந்த சாதனை இருந்தது.விம்பிள்டன் போட்டியில் தொடா்ந்து அதிகமுறை (8) அரையிறுதிக்கு முன்னேறியவராக ஜோகோவிச் சாதனை படைத்தாா். முன்னதாக, சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் 7 முறை தொடா்ந்து அரையிறுதிக்கு வந்ததே சாதனையாக இருந்தது.‘இதுபோன்ற தருணங்களுக்காகவே நான் இன்னும் டென்னிஸ் விளையாடுகிறேன். என்னை விட 15 வயது குறைவான இளம் வீரா்களையும், மிக நெருக்கமான ஸ்கோரில் என்னால் வெல்ல முடிகிறது.இது எனக்கே ஆச்சா்யமளிப்பதாக இருந்தாலும், இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்ற எதிா்பாா்ப்பு எப்போதும் என்மேல் எனக்கு இருக்கும்’ - ஜோகோவிச்