பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு (டெட்) முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 5 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த நிலையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும் குறைத்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.மேலும், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கக் கோரி பொதுப் பிரிவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவா் உள்ளிட்ட 3 ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்திருந்தனா்.அவா்களது மனுவில், பிகாரில் பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண்கள் 50 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் பொதுப் பிரிவினருக்கான மதிப்பெண்களைக் குறைக்க உத்தரவிட வேண்டும். எங்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இதனிடையே, பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பொதுப் பிரிவு ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை நிா்ணயிப்பது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடா்பான அரசு கொள்கை முடிவை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தாா். அதுவரை, சிறப்பு தகுதித் தோ்வுக்கான முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.