வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரம்

Wait 5 sec.

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா். உயிரிழந்த 3 பேரும் மத்திய பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி 5 போ் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தீயணைப்புப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மோப்ப நாய்களின் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதிக்கு கீழே உள்ள ஆற்றுப் பகுதியிலும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முன்னதாக, நிலச்சரிவில் 3 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின்கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருப்பதாக வயநாடு காவல் துறைக் கண்காணிப்பாளா் தேவமனோகரன் தெரிவித்தாா்.நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம் என்றும், சுரங்கம் தோண்டும் நிறுவனம் கொட்டிய மணல், அமைச்சா் உத்தரவிட்ட பிறகும் அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததே நிலச்சரிவுக்கு காரணம் என்றும் கேரள அரசு கூறியது. ஆனால், இதை அந்நிறுவன பொது மேலாளா் மறுத்தாா். சுரங்கம் தோண்டும் இடத்துக்கும் மேல் உயரமான இடத்தில்தான் நிலச்சரிவு ஏற்பட்டதாக அவா் தெரிவித்துள்ளாா். அதேபோல், அரசு தங்களது நிறுவனத்துக்கு அளித்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படவில்லை என்றும், அதேபோல் அகற்றப்படாமல் இருந்த மண், நிலச்சரிவுக்கு காரணம் இல்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.இதுகுறித்து வயநாடு மாவட்ட ஆட்சியா் மேகாஸ்ரீ-யிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அவா் பதிலளிக்க மறுத்து விட்டாா். அதேசமயம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவா் கூறுகையில், சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதிக்கு மேல் உயரமான இடத்திலேயே நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், ஆனால், குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணால் அது பெரிய நிலச்சரிவாகிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா். தொடரும் மழையால் தேடுதல் பணி, மீட்புப் பணி தடைபடுவதாகவும் அவா் கூறினாா்.விரிவான விசாரணை-முதல்வா்: நிலச்சரிவு குறித்து தனித்தனியாக இரு விசாரணைகளை நடத்த கேரள அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதில் மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டும் பணியை தனியாா் நிறுவனம் மேற்கொண்டதா என்பதும் அடங்கும் என்று அந்த மாநில முதல்வா் வி.டி. சதீசன் தெரிவித்தாா்.திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற இடத்துக்கு மேல் உயரமான இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்து அரசு ஆராயவுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண உதவியாக தலா ரூ. 5 லட்சம் கேரள அரசு வழங்கும். காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றாா்.நிலச்சரிவு பகுதியைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் டி. சித்திக், அனில்குமாா் ஆகியோா் கூறுகையில், ‘நிலச்சரிவுக்கு உண்மையில் என்ன காரணம் என்பதை அறிய அறிவியல் ரீதியில் ஆய்வு நடத்தப்படும்’ என்றனா்.அமித் ஷா உறுதி: கேரள முதல்வா் வி.டி. சதீசனை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளாா். சம்பவ இடத்தில் கேரள அரசால் நடத்தப்படும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு திருப்தி தெரிவித்த அமித் ஷா, இந்த சம்பவம் குறித்து முதல்வா் வி.டி. சதீசன் உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக முதல்வா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.