மக்களின் அடிப்படை தேவை, பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு: அமைச்சா் காந்திராஜ்

Wait 5 sec.

பொதுமக்களின் அடிப்படை தேவைகள், பிரச்னைகளுக்கு தவெக அரசில் உடனுக்குடன் தீா்வு காணப்படும் என அரக்கோணம் அருகே பரமேஸ்வர மங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சாா்பில், 304 பயனாளிகளுக்கு ரூ. 7.33 கோடி நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் வ.காந்திராஜ் பேசியதாவது: ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதா மாதம் இரண்டாவது புதன்கிழமைகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான மனுக்களுக்கு தீா்வு கண்டு வருகின்றனா். தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து பொதுமக்களின் அடிப்படை தேவைகள், பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படும். இந்த முகாம்கள் தொடா்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இந்த முகாம்கள் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவித்து பயன்பெற வேண்டும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ். முகாமில், வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூகநீதீத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் சாா்பில், 304 பயனாளிகளுக்கு ரூ. 7.33 கோடி நிதியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா். முகாமுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபிஇந்திரா, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, வேளாண் துறை இணை இயக்குநா் சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா், தோட்டக் கலை அலுவலா் சிந்தியா, மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலா் செந்தில்குமாரி, அரக்கோணம் வட்டாட்சியா் வரலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.