பண்ருட்டியில் வீடு புகுந்து 35 பவுன் நகைகள் மற்றும் அரைகிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி விஎம்எஸ் நகா் 2-வது தெருவைச் சோ்ந்த தாவூத், குவைத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த ஜூலை 3-ஆம் தேதி பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பிரசவத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு அவா் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.மேலும் வீட்டில் பீரோவிலிருந்த சுமாா் 35 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.இதுதொடா்பாக பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இரண்டு தனிப்படை போலீஸாா், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய அடையாளம் தெரியாத நபா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.